Tuesday, February 23, 2010

யார் இந்த மானிடன்?

என் போதாத காலம் சென்ற வாரம் ஆரம்பித்தது. நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக உரையாடல் blogs பக்கம் திரும்பியது. நீ அதிகம் விரும்பி படிக்கும் blog எது? நண்பன் திடீரென்று கேட்டதும் நான் திகைத்துவிட்டேன். இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவன்தான் என்றாலும் blogs பார்ப்பதில்லை. எனவே, தயக்கத்துடன், தெரியாது என்று பதிலளி்த்தேன்.

'என்னது தெரியாதா? நம்ம சாருவோட் ப்ளாக் கூட பார்த்ததில்லையா?'

'இல்லை'

'ஜெயமோகன்?'

'இல்லை'

'எஸ்.ரா?'

'இல்லை'

இன்னு்ம் இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னார்கள். என் அறியாமையின் ஆழத்தைக் கண்டு அவர்களுக்கு பரிதாப உணர்வு தோன்றியிருக்கவேண்டும். பக்கத்தில் வந்து உட்கார்ந்து, என் நோட் புக்கைப் பிரித்து சில இணைய முகவரிகளை எழுதிக்கொடுத்தார்கள். மாற்றி, மாற்றி ஒவ்வொருவராக வாங்கி எழுதினார்கள். கிட்டத்தட்ட பதினைந்து முகவரிகள் இருந்தன.

'முதல்ல, இவங்களைப் படி. அப்பத்தான் உனக்கு உலகம் புரியும்.'

உலகத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் தீரா காதல் கொண்டவன் என்பதால், அன்று இரவே என் வேட்டையை ஆரம்பித்துவிட்டேன். ஒரு வாரம் முழுவதும் வெளியில் எங்கு்ம் செல்லாமல் ஒவ்வொரு வலைப்பதிவையும் கவனமாக படித்தேன். பின்னூட்டம், பதிவு, அனானி, சாட்டிங், ட்விட்டிங், கூகுள் அனாலிடிக்ஸ், தமிழ்மணம் என்று ஒரு புதிய உலகம் கண்முன் விரிந்தது. நண்பர்கள் கொடுத்த முகவரிகள் அல்லாது வேறு சிலவற்றையும் கண்டுபிடித்தேன்.

கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்து சேர்ந்தேன்.

1) பான்பராக், பீடி, சிகரெட், கஞ்சா, அபி்ன், பிரவுன் சுகர் போன்றவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது எத்தனை தீங்கானதோ அத்தனை தீங்கானது கெட்ட வலைப்பதிவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதும்.

2) எது நன்மை தரும் என்பதைச் சொன்னால்தான் எது தீங்கானது என்பது புரியும். எனவே, பயனளிக்கும் கருத்துகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அதற்கு ஒரே வழி நீ ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பதுதான் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதற்கான அடித்தளத்தையும் அவர்களே உருவாக்கி கொடுத்தார்கள்.

எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். மாற்று கருத்து இருந்தால் விவாதியுங்கள்.

மாறவும், மாற்றவும் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், தோழமையுடன்.

மானிடன்.